கால்நடை துறையில் பிறந்த தேதியில் சர்ச்சை ஓய்வு பெற்றவருக்கு மீண்டும் பணி : உயர்நீதிமன்றம் உத்தரவு


மதுரை: பிறந்த தேதியில் மாற்றம் செய்ததை அங்கீகரித்தபின் அதை ரத்து செய்த பெரியகுளம் கால்நடை உதவி இயக்குனரின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை, ஓய்வு பெற்ற உதவியாளருக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டது.தேனி லட்சுமிபுரம் கால்நடை மருந்தக உதவியாளர் சன்னாசி தாக்கல் செய்த மனு: பெரியகுளம் கால்நடை மருத்துவமனை உதவியாளராக 1990ல் சேர்ந்தேன். அலுவலக பணிப் பதிவேட்டில் பிறந்த தேதி 1956 ஏப்.,13 என தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. பெரியகுளம் நகராட்சி பிறப்புச் சான்றின்படி உண்மையான பிறந்ததேதி 1959 அக்., 7. ஆனால் பெற்றோர் தவறுதலாக 1956 என குறிப்பிட்டு பள்ளியில் சேர்த்தனர். நகராட்சி பிறப்புச் சான்றின்படி பணிப் பதிவேட்டில் திருத்தம் செய்யுமாறு கால்நடை உதவி இயக்குனரிடம் 1995 ல் மனு அளித்தேன். தேதியில் மாற்றம் செய்ய உதவி இயக்குனர், மண்டல இணை இயக்குனர் ஒப்புதல் அளித்தனர்.
உதவி இயக்குனர் 2013 அக்.,28ல் என் பிறந்த தேதி மாற்றத்தை ரத்து செய்து, 1956 ன்படி ஓய்வு பெறும் தேதி 2014 ஏப்.,13 என நிர்ணயித்தார். விதிகள்படி பிறந்ததேதியில் மாற்றம் செய்ய பணியில் சேர்ந்த 5 ஆண்டுகளுக்குள் 
விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி விண்ணப்பித்ததை ஏற்று அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதை ரத்து செய்ய அதிகாரம் இல்லை. 1959ல் பிறந்த தேதிப்படி நான் ஓய்வு பெற 3 ஆண்டுகள் உள்ளன. உதவி இயக்குனரின் உத்தரவை ரத்து செய்து, தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.உதவி இயக்குனர், ''பிறந்த தேதியில் மாற்றம் செய்ய மனுதாரர் 5 ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்தது போல் போலி ஆவணங்கள் தயாரித்துள்ளார்,'' என பதில் மனு செய்தார்.
நீதிபதி: மனுதாரர் பிறந்த தேதி நகராட்சி பதிவேட்டின்படி சரியாக உள்ளது. அரசுத்தரப்பில் கூறுவது நம்பும்படி இல்லை. பிறந்த தேதியில் மாற்றம் செய்யக்கோரிய மனுதாரரின் விண்ணப்பத்தில் அதிகாரிகள் முறையாக கையெழுத்திட்டு அங்கீகரித்துள்ளனர். பிறந்த தேதி பதிவு மாற்றத்தை ரத்து செய்த உதவி இயக்குனரின் உத்தரவை ரத்து செய்கிறேன். மனுதாரர் பணியில் இல்லாத காலத்திற்கு சம்பளம் வழங்க இயலாது. மனுதாரரை பணித் தொடர்ச்சியுடன் மீண்டும் ஒரு மாதத்தில் பணியில் சேர்க்க வேண்டும் என்றார். மனுதாரர் வழக்கறிஞர் ஆர்.ஏ.மோகன்ராம் ஆஜரானார்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click