தமிழகத்தின் பிற மாவட்டங்களைப் போல சென்னையிலும் சம அளவில் மின் வெட்டை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்வதற்கான நெறிமுறைக் குழுக் கூட்டம், ஒரு வாரத்தில் கூடவுள்ளது. இதில் சமமான மின் வினியோக திட்டம் உருவாக்கப்பட உள்ளது.
மின்சார பற்றாக்குறையால், சென்னையில் அதிகாரப்பூர்வமாக இரண்டு மணி நேர மின் வெட்டு அமலாகிறது. மற்ற மாவட்டங்களில் அறிவிக்கப்படாமல் பல மணி நேரங்களுக்கு மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான மின் வினியோகம் மற்றும் மின் வெட்டை அமல்படுத்த வேண்டும் என்று தென்னிந்திய இரும்புத் தொழிற்சாலைகள் சங்கத்தின் சார்பில், இந்திய நிகழ்ச்சிகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஆணையம், தமிழக மின்சார நிலைமை குறித்து, 23 அம்சங்கள் அடங்கிய பதிலை அளிக்கும்படி, தமிழக மின் வாரியத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், இதை எதிர்த்து மின் வாரியம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக மின்வாரியம் தனது மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் குறித்த விரிவான அறிக்கையை, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதற்கிடையில், தமிழக மின் நுகர்வோர் சங்கத்தின் சார்பில், ஒழுங்குமுறை ஆணையத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதிலும், சென்னையையும் மற்ற மாவட்டங்களைப்போல் சரிசமமாக பாவித்து, சமமான மின் வினியோகம் மற்றும் மின் வெட்டை அமல்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டது.
இதை விசாரித்த ஒழுங்குமுறை ஆணையம், ஆணையத்தின் செயலர் குணசேகரன், மின் நுகர்வோர் சங்கத் தலைவர் டி.பாலசுந்தரம், கோவை தொழிற்சாலைகள் சங்கம் (கொடீசியா) நிர்வாகி இளங்கோ உள்பட ஐந்து பேர் கொண்ட நெறிமுறைக் கமிட்டியை அமைத்து, அறிக்கை தயாரிக்க உத்தரவிட்டது. இந்தக் கமிட்டியின் முதல் கூட்டம் இரண்டு மாதங்களுக்கு முன் நடந்தது. பின்னர் தேர்தல் காரணமாக அடுத்த கூட்டம் தாமதமானது. தமிழக மின் வாரியமும் தனது அறிக்கையை தாக்கல் செய்யாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து நெறிமுறைக் கூட்டத்தை உடனே கூட்டுமாறு, தமிழக மின் நுகர்வோர் சங்கம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது.
இதன் அடிப்படையில், இன்னும் இரு தினங்களில் அறிக்கையை தாக்கல் செய்வதாக, மின் வாரிய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இந்த அறிக்கை தாக்கலானதும், நெறிமுறைக் கூட்டம் கூடி, சமமான மின் வெட்டு குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று, மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, தொழிற்சாலைகளுக்கான மின் வெட்டு அளவை குறைப்பதுடன், எதிர்காலத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களுக்கும் சமமான மின் வெட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.