அரசு, தனியார் நிறுவனங்களில் பொங்கலுக்கு முன்னால் ‘வேட்டி தினம்’

         தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் அலுவலர்களும் ஜனவரியின் முதல் இரண்டு வாரத்தில் ஏதாவது ஒரு நாளை வேட்டி தினமாகக் கொண்டாட வேண்டும் என்று கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயம் கேட்டுக் கொண்டுள்ளார்.


          நலிந்து கிடந்த கோ-ஆப்டெக்ஸ் தயாரிப்புகளில் புதுமைகளை புகுத்தி, அந்த நிறுவனத்தை லாபப் பாதையில் பயணிக்க வைத்திருக்கும் சகாயம் ஐஏஎஸ், ‘வேட்டி தினம்’ கொண்டாட இருப்பதாக ஏற்கெனவே ‘தி இந்து’விடம் சொல்லி இருந்தார். அதன்படி, தைப் பொங்கலையொட்டி ஜனவரி 1 முதல் 14-ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளை வேட்டி தினமாகக் கொண்டாட வேண்டும் என தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு அவர் கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்தக் கடிதத்தில் சகாயம் கூறி இருப்பதாவது:

             இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றின் வழித்தடத்தில் ரோமானியர்களுக்கே ஆடை அனுப்பி நாகரிகத்தின் நளினத்தை வெளிப்படுத்தியவர்கள் தமிழர்கள். அத்தகைய ஆடை பாரம்பரியம் கொண்ட தமிழர்களின் அடையாளமாய் நீண்டகாலமாய் நின்று நிலைத்தது வேட்டி. அது, தமிழர்கள் ஆடை மரபின் அழகான வெளிப்பாடு மட்டுமின்றி, பாரம்பரியத்தின் பகட்டான பதிவும்கூட. மானம் காத்ததுடன் மண்ணின் மணத்தை மாண்புற மலரச் செய்ததும் இந்த வேட்டிதான்.

விலகிச் சென்ற வேட்டி

              ஆனால், இன்றைய நவீன நாகரிகச் சூழலில் பெரும்பாலான தமிழர்களிடம் இருந்து வேட்டி விலகிச் சென்றுவிட்டது. கம்பீரத்தின் அடையாளமான வேட்டியை இன்று அதிகம் காண முடிவதில்லை. அதை ஆடையாக மட்டும் பார்க்காமல் எளிய நெசவாளர்களின் வியர்வை வெளிப்பாடாக; உழைப்பின் உன்னத உருவமாகப் பார்க்க வேண்டும். எனவே, வேட்டி என்ற அழகான ஆடை மரபை ஆராதித்திடவும் வலுப்படுத்திடவும் அதை தொய்விலாது நெய்கின்ற நெசவாளர்களுக்கு தோள் கொடுத்திடவும் வேட்டி தினம் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்.

பொங்கலுக்கு முன்னால்…

       தமிழர்களின் மரபு விழாவாம் பொங்கலுக்கு முன்னால், ஜனவரியில் ஏதாவதொரு நாளை எல்லோரும் வேட்டி தினமாகக் கொண்டாட வேண்டும். அன்றைய தினத்தில் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் விருப்பத்துடன் வேட்டி அணிந்து, மரபின் மாண்பினை வேட்கையுடன் வெளிப்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

           உங்களின் எண்ணத்தை கவரும் வகையில் அனைத்து வடிவங்களிலும் வண்ணங்களிலும் அனைத்து ரக நூல்களிலும் சிறிய மற்றும் பெரிய கரைகளிலும் வேட்டிகளை சிறப்பாக உற்பத்தி செய்து விற்பனைக்கு வைத்திருக்கிறது கோ-ஆப்டெக்ஸ். ஆரோக்கியமான ஆடை அணிவதன் மகத்துவத்தை அறிந்திட, கோ-ஆப்டெக்ஸ் அன்புடன் அழைக்கின்றது.

நம்பிக்கை ஒளி ஏற்றுவோம்

               தங்களுக்குத் தேவைப்படும் அனைத்து வகை வேட்டி ரகங்களும் அருகில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தயாராக உள்ளன. தேவைப்பட்டால் தங்களது வளாகத்திலேயே வேட்டி ரகங்களை கொண்டு வந்து விநியோகம் செய்யத் தயாராக இருக்கிறோம். விற்பனைக்காக மட்டுமல்ல.. தறிக் கொட்டகைகளில் நமக்காக அன்றாடம் நைந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியேற்றுவோம் என நினைக்கும் கோ-ஆப்டெக்ஸ், அதற்கு தங்களின் ஒத்துழைப்பை வேண்டுகிறது.

இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் சகாயம்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click