ரூ.1.25 லட்சத்தில் மினி காற்றாலை:தினம் 15 யூனிட் மின் உற்பத்தி

ஈரோடு: வெளி நாடுகளை போல, தமிழகத்திலும் மினி காற்றாலை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஒருமுறை, 1.25 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, மினி காற்றாலையை அமைத்தால், தினமும், 15 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

தமிழகத்தில் தினமும், 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. அனல், அணு, நீர், காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 3,500 மெகாவாட் மின்சாரம் காற்றாலை மூலம் கிடைக்கிறது.தவிர, தமிழகத்தில் ஆண்டுக்கு, ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படுவதால், மின்தேவை அதிகரித்து வருகிறது. போதிய காற்று, மழை இன்றி, காற்றாலை, நீர் மின் உற்பத்திகள் அடிக்கடி தடைபடுவதால், கடந்த ஐந்தாண்டாக மின்வெட்டு பிரச்னை தீர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.இதனால், கடந்த காலத்தில் நாளென்றுக்கு, 18 மணி நேரம் வரை மின்தடை செய்யப்பட்டு, ஒட்டுமொத்த தொழில் துறையும், மக்களும் முடங்கினர். காற்று காலம் துவங்கியதால், மின்வெட்டு பிரச்னைக்கு தற்காலிக தீர்வு கிடைத்துள்ளது.தமிழக அரசு மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வுகான, மாற்று எரி சக்தியாக சோலார் மின் உற்பத்தி மற்றும் மின் சிக்கன நடவடிக்கையை முழுவீச்சில் செயல்படுத்துகிறது. இதல் ஒருபடியாக, மினி காற்றாலை திட்டம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.வீடு, அரசு, தனியார் அலுவலகம், வர்த்தக நிறுவன கட்டிடங்களில், மினி காற்றாலை அமைப்பதன் மூலம், தினமும், 15 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து, சுய தேவையை பூர்த்தி செய்ய முடியும்.இதுகுறித்து வேகா கிரீன் பவர் உரிமையாளர் இளங்கோ கூறியதாவது:

உலகில் சோலார், காற்றாலை மின் உற்பத்தியில் ஜெர்மனி முதலிடத்தில் உள்ளன. தமிழக மின் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய, சோலார் மின் உற்பத்தி திட்டத்துக்கு முன்னுரிமை வழங்கி, மானியம் வழங்குகிறது.சோலார் மின் உற்பத்தியில் தினமும், 7 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். அதே சமயம் 1 கே.வி., மினி காற்றாலை பொருத்தினால், 15 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.அரசு மானியம் போக, 1.25 லட்சம் ரூபாய் செலவாகிறது. வீடு, கடைகள், வணிக வளாகங்களில், பத்துக்கு பத்து இடத்தில் பொருத்த முடியும். வெர்ட்டிக்கல் ஆக்ஸிலில், வலு குறைந்த ரெக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது.
காற்றில் ரக்கைகள் சுற்றும்போது, உற்பத்தியாகும் மின்சாரத்தை இன்வெர்ட்டர் மூலம், பேட்டரிகளில் சேமிக்கலாம். கடற்கரை ஒட்டிய பகுதிகள், தடையில்லா காற்று கிடைக்கும் இடங்களில் அமைக்க வேண்டும். ஒரு கே.வி. 2, 3 மற்றும், 5 கே.வி., உற்பத்திக்கான மினி காற்றாலைகள் பயன்பாட்டில் உள்ளன. இக்கருவியை சென்னையை சேர்ந்த வின்செட் இந்தியா நிறுவனம் தயாரிக்கிறது.சோலார், மினி காற்றாலை ஆகிய இரண்டையும் பொருத்தினால், மின்வாரியத்தில் மின்சாரம் பெறவேண்டிய அவசியம் இருக்காது. சுயதேவையை தாமே பூர்த்தி செய்து கொள்ளலாம். வெளி நாடுகளில் நடைமுறையில் உள்ளதை, நாமும் நடைமுறைப்படுத்தலாம், என்றார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=744151

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click