புதிய மின் திட்டங்கள்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு


மின் திட்டங்கள், புதிய துணை மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இன்று முதல்வர் ஜெயலலிதா பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார்.
இது குறித்த அவரின் அறிக்கை:
அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளுக்குள் 606.5 மெகாவாட் அளவுக்கான மின் உற்பத்தி திறன் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது.  ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, மேட்டூர் அனல் மின் நிலையம், வடசென்னை அனல் மின் நிலைய இரண்டாவது நிலையின் முதல் அலகு மற்றும் வல்லூர் கூட்டு மின் திட்டத்தின் இரண்டாவது அலகு ஆகிய புதிய மின் உற்பத்தி நிலையங்கள் முழு உற்பத்தி திறனை எட்டும் நிலையில் உள்ளன.
வட சென்னை அனல் மின் திட்டத்தின் அடுத்த அலகு மே மாதம் முதல் தனது உற்பத்தியை தொடங்க உள்ளது.  வல்லூர் கூட்டு மின் திட்டத்தின் மூன்றாவது அலகு வருகின்ற அக்டோபர் மாதம் முதல் தனது உற்பத்தியை தொடங்க உள்ளது.  தூத்துக்குடி கூட்டு மின் திட்டத்தின் 500 மெகாவாட் திறன் கொண்ட இரு அலகுகள் முறையே வருகின்ற டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உற்பத்தியை தொடங்க உள்ளன.

இது மட்டுமல்லாமல்,  ஏற்கெனவே அறிவித்தபடி 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் விரிவாக்கத் திட்டம் அமைப்பதற்கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகள் கோரி பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளன.  2 ஒ 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்புப் பொருளாதார மையத் திட்டம் மற்றும் 2 ஒ 660 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி அனல் மின் திட்டம் ஆகியவற்றிற்கான ஒப்பந்தப் புள்ளிகளும் கோரப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 2 x 800 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையம் அமைக்கப்  படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில், 7,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,000 மெகாவாட் மின் திறன் கொண்ட சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் உருவாக்கப்படும். இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்.
முதற்கட்டமாக, குந்தா நதியின் துணை நதியான சில்லஹல்லா ஆற்றின் குறுக்கே, 90.8 மீட்டர் உயரத்திற்கு 2.25 டி.எம்.சி. அடி கொள்ளளவு கொண்ட ‘சில்லஹல்லா மேல் நீர்த்தேக்கம்’ நிறுவப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ள  5.5 டி.எம்.சி அடி கொள்ளவு கொண்ட அவலாஞ்சி-எமரால்டு  நீர்த்தேக்கங்களுடன் இணைக்கப்படும். இதனை இணைப்பதற்காக 2750 மீட்டர் நீளமுடைய சுரங்க  நீர்வழித்  தடம் அமைக்கப்படும்.
இரண்டாவது கட்டமாக, உத்தேசிக்கப்பட்டுள்ள சில்லஹல்லா நீர்த் தேக்கத்திற்கும், பில்லூர் நீர்தேக்கத்திற்கும் இடையே உள்ள 1,500 மீட்டர் உயரத்தைப் பயன்படுத்தி 2,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய மின் நிலையம் அமைக்கப்படும்.
மின் உற்பத்திக்குப் பின் உபயோகப்படுத்தப்பட்ட நீர், கடைவாயில் சுரங்கம்,  வழியாக பில்லூர் நீர்த்தேக்கத்தை அடையும். நிலத்தடி மின் நிலையத்தை அடைய அணுகு சுரங்க வழி அமைக்கப்படும். இத்திட்டம் நிறைவு பெற சுமார்  8 முதல் 10 ஆண்டுகள் ஆகும்.
மேலும் இத்திட்டம், அதிகரித்து வரும் காற்றாலை மின் உற்பத்தி,  நிறுவப்படவுள்ள சூரிய மின் உற்பத்தி மற்றும் இரவு நேரங்களில் அனல் மற்றும் அணு மின் நிலையங்களில் மிகையாகக் கிடைக்கப் பெறும் மின்சாரத்தை சேமித்து வைக்கும் விதமாக, இந்த உபரி மின்சாரத்தைப் பயன்படுத்தி கீழ் நீர்த் தேக்கத்திலிருந்து  மேல் நீர்த்தேக்கத்திற்கு  நீர் ஏற்றி வைக்கப்படும். அவ்வாறு ஏற்றித் தேக்கப்பட்ட நீரையே  பயன்படுத்தி  உச்ச மின் தேவை காலங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும்.
மின்சாரத்தை உற்பத்தி செய்தால் மட்டும் போதாது, மின் விநியோகமும் சீராக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பையும், தொடரமைப்பையும் வலுப்படுத்த 5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்த ஜப்பானிய நிறுவனம்  3,572 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கும். இந்தக் கடன் சிறப்பினமாகக் கருதப்பட்டு ஆண்டு ஒன்றிற்கு 0.55 சதவீத சலுகை வட்டியைக் கொண்டிருக்கும். மேலும் இந்தக் கடன் தொகையை, கடன் பெற்ற 10 ஆண்டுகள் கழித்து 20 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தலாம். இதன் மூலம் மாநிலத்தின், குறிப்பாக சென்னையின் மின் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு சீரான மின் விநியோகம் உறுதிபடுத்தப்படும்.
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் நிதி உதவி மூலம், 2,750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 புதிய 400 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையங்கள் மற்றும் அதற்குரிய மின்தொடர் பாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தப் புதிய மின் நிலையங்கள் சென்னையில் கிண்டி, கொரட்டூர், மணலி மற்றும் ஒட்டியம் பாக்கத்திலும், கோவையில் காரமடையிலும் அமைக்கப்படும்.
இது மட்டுமல்லாமல், 822 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 230 கிலோ வோல்ட் திறன் கொண்ட 14 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். 
இந்தத் துணை மின் நிலையங்கள் சென்னையில் ஆலந்தூர், அம்பத்தூர் மூன்றாவது பிரதான சாலை, சென்னை சென்ட்ரல், ராஜா அண்ணாமலைபுரம் மற்றும் மின்சார வாரியத் தலைமை அகம் ஆகிய இடங்களிலும்; திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் கருவலூர்; மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலம்; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்; அரியலூர் மாவட்டம் பொய்யூர்; திருவண்ணாமலை மாவட்டம் புரிசை; விருதுநகர் மாவட்டம் சவ்வாஷ்புரம்;  ஈரோடு மாவட்டம் செண்பகபுதூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்படும்.
தென் மாநிலங்களுக்கு இடையே மின் பகிர்மாற்றம் செய்யும் வகையில் வேலூர் மாவட்டம் திருவலத்தில் 765 கிலோ வோல்ட் திறன் கொண்ட ஒரு புதிய துணை மின் நிலையம் இந்திய மின் தொடரமைப்பு நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி, பிற மாநிலங்களிலிருந்து அதிக அளவு மின்சாரத்தை பெற ஏதுவாக, திருவலத்தில் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையமும் அதற்கான மின் தொடர்களும் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு துவங்கப்படும்.
காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வெளிக் கொணர்ந்து அதனை மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கோ, இந்த வகை மின்சாரம் அதிக அளவில் உற்பத்தியாகும் நேரங்களில் உபரி மின்சாரத்தை செலுத்தும் வகையிலோ, தேவையான மின் தொடரமைப்பு இல்லாத காரணத்தால் இந்த மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில், மாநிலத்தின் தென் பகுதியில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்தும் விதத்தில்  2,300 கோடி ரூபாய் செலவில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறிலிருந்து சென்னைக்கு 1,488 சுற்று கிலோ மீட்டர் நீளத்திற்கு 400 கிலோ வோல்ட் மின் தொடர்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே போன்று,  1,230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை, உடுமலைப்பேட்டை மற்றும் தேனி பகுதிகளில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தைக் கொண்டு செல்லும் வகையில் தேனி மாவட்டத்தில் தப்பகுண்டு, மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைக்கடவு மற்றும் ராசிபாளையம் ஆகிய இடங்களில் புதிய 400 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளும், அவற்றை இணைத்து 788 சுற்று கிலோ மீட்டர் நீளமுடைய 400 கிலோ வோல்ட் மின்தொடர் பாதை அமைக்கும் பணிகளும் தொடங்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டம், கானார்பட்டியில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மற்றுமொரு 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
இது மட்டுமன்றி, காஞ்சிபுரம் மாவட்டம் ஓமேகா தொழிற்பூங்கா, திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு ஆகிய இரண்டு இடங்களில் புதிய 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களும்; சென்னை கோடம்பாக்கம் மற்றும் திருமங்கலம் தெற்கு; திண்டுக்கல் மாவட்டம் ஏழுவானம்பட்டி மற்றும் பாப்பம்பட்டி; கோயம்புத்தூர் மாவட்டம் குரு  நல்லிபாளையம்;  புதுக்கோட்டை மாவட்டம் மழையூர்; திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், நாங்குநேரி, மேலக்கல்லூர் மற்றும் பழையபேட்டை; வேலூர் மாவட்டம் முகுந்த ராயபுரம்; காஞ்சிபுரம் மாவட்டம் ஓமேகா தொழிற் பூங்கா,  பெரும்பாக்கம் மற்றும் புதுத் தாங்கல்; கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி; தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம்; ஈரோடு மாவட்டம் தாளவாடி; திருவண்ணாமலை மாவட்டம் விண்ணவனூர் மற்றும்  வேலூர் ஆகிய 19 இடங்களில் 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களும்; ஈரோடு மாவட்டம் சிமிட்டஹள்ளி; கரூர் மாவட்டம் இ. கருங்கல்பட்டி மற்றும் செல்லிவலசு; தஞ்சாவூர் மாவட்டம் குருவிக்கரம்பை;  காஞ்சிபுரம் மாவட்டம் இளையனூர் வேலூர், மேலபுடி மற்றும் இராமாபுரம்; திருநெல்வேலி மாவட்டம் நக்கல முத்தான்பட்டி; பெரம்பலூர் மாவட்டம் பென்னகோணம்; திருச்சி மாவட்டம் டி. ஆலை; தருமபுரி மாவட்டம் வி. முத்தாம்பட்டி ஆகிய இடங்களில் 11 புதிய 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களும் அமைப்பதற்கான பணிகள் இந்த ஆண்டு துவங்கப்படும்.
மொத்தத்தில், இந்த ஆண்டு 400 கிலோவோல்ட் திறன் கொண்ட 10 துணை மின் நிலையங்கள், 230 கிலோவோல்ட் திறன் கொண்ட 16 துணை மின் நிலையங்கள்,  110 கிலோவோல்ட் திறன் கொண்ட 19 துணை மின் நிலையங்கள் மற்றும்  33 கிலோவோல்ட் திறன் கொண்ட 11 துணைமின் நிலையங்கள் என மொத்தம்  56 துணை மின் நிலையங்கள் 8,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
புதிய மின் உற்பத்தி நிலையங்களை இயக்கி வைத்தல், புதிய மின் திட்டங்களைத் தொடங்குதல் மட்டுமல்லாது, பற்றாக்குறையை 85 சதவீதம் வரை ஈடு செய்யும் வகையில், நீண்ட கால அடிப்படையிலான ஒப்பந்தப் புள்ளிகள், மின் கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வகையில் முதல் கட்டமாக வருகின்ற அக்டோபர் மாதம் முதல் நீண்ட கால அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு 1000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும்.
புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் துறையைப் பொறுத்த வரையில், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில் 7,140 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன.
சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மூன்றாண்டுகளில் 3,000 மெகாவாட் அளவிற்கு சூரிய ஒளி மூலம் மின் உற்பத்திச் சாதனங்கள் மற்றும் நிலையங்கள் நிறுவப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தேன். சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை ஒரு மக்கள் இயக்கமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் வீட்டு மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்திச் சாதனங்களைப் பொருத்தி மின் உற்பத்தி செய்வதன் மூலம் அதிக அளவில் மின்சார உற்பத்தி இலக்கை அடைய முடியும் என கண்டறிந்தேன். இதனை ஊக்குவித்து பெரும்பாலான வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் முன் வந்து இச்சாதனங்களைப் பொருத்தும் வகையில் அத்தகைய வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வழங்கி வரும் 30 சதவீத மானியத்துடன் கூடுதலாக தமிழக அரசின் சார்பில் உற்பத்திச் சார்ந்த  ஊக்கத் தொகையும் வழங்க ஆணையிட்டிருந்தேன். இதன்படி, இந்த வீட்டுக் கூரை மின் உற்பத்திச் சாதனங்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றிற்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இரண்டு ரூபாயும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு ரூபாயும், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு 50 பைசாவும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்து இருந்தேன். தற்போது தமிழக அரசின் சார்பில் முதலீட்டு மானியம் வழங்குமாறு கோரிக்கைகள் வந்துள்ளதை ஏற்று, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள உற்பத்திச் சார்ந்த ஊக்கத் தொகை அல்லது கிலோவாட் ஒன்றிற்கு 20,000 ரூபாய் முதலீட்டு மானியம் மேற் கூரையில் சாதனங்களைப் பொருத்தி மின் உற்பத்தி செய்யும் வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தின் முதல் கட்டமாக  10,000 வீட்டு மின் நுகர்வோர் பயன் பெறுவர்.
தமிழ்நாடு மின் வாரியத்தில் ஏறத்தாழ 2.2 லட்சம் மின்மாற்றிகள் பொருத்தப்பட்டு நுகர்வோர்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 10 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மின் நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரம் வழங்கவும், புதிய பயனீட்டாளர்களுக்கு தாமதமின்றி மின் இணைப்புகள் வழங்கிடவும், பழுதான மின்மாற்றிகளை மாற்றிடவும் புதிய மின் மாற்றிகளை கொள்முதல் செய்தல் மிகவும் அவசியமாகிறது. இதுவரை ஆண்டொன்றிற்கு சராசரியாக 10,000 மின்மாற்றிகளுக்கும் குறைவாகவே வாங்கப்பட்டு வந்துள்ளது. மின் மாற்றிகள் பற்றாக்குறை காரணமாக மின் நுகர்வோர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாவதாக அறிகிறேன். இதனைக் களையும் பொருட்டு இதுவரை இல்லாத அளவாக 500 கோடி ரூபாய் செலவில் 20,000 புதிய மின் மாற்றிகள் கொள்முதல் செய்யப்படும்.
மின்சாரத்திற்கானத் தேவை அதிகரித்து வரும் நிலையில் நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரத்தை உறுதி செய்யும் பொருட்டு புதிய உயர்வழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் வழித் தடங்கள் அமைக்க வேண்டியது அவசியமாகும். இந்த ஆண்டு 850 கோடி ரூபாய் செலவில் 15,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய உயர்வழுத்த மற்றும் தாழ்வழுத்த  மின் வழித் தடங்கள் அமைக்கப்படும்.
இந்தியாவிலேயே 100 சதவீதம் மின் வசதி, பெற்றுள்ள ஒரு சில மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டில்  தற்போது சுமார் 2 கோடியே 40 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. தாமதமின்றி உடனுக்குடன் மின் இணைப்பு வழங்கும் விதமாக இந்த ஆண்டு வீட்டு மின் இணைப்பு, விவசாய மின் இணைப்பு, வணிக மின் இணைப்பு, தொழிற்சாலை மின் இணைப்பு போன்ற 11 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும்.
- என்று பேசினார் முதல்வர் ஜெயலலிதா.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click