மின் வாரியத்தில் 4,000 பணியாளர் தேர்வு: தீர்ப்பு வரும் வரை காத்திருக்க உத்தரவு


மின்சார வாரியத்தில், 4,000 உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுப்பது, வழக்கின் இறுதி உத்தரவைப் பொறுத்து அமையும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பரந்தஹள்ளியைச் சேர்ந்த, வேலு என்பவர் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில், 4,000 உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு, 35; பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, 32; பொதுப் பிரிவினருக்கு, 30 என, வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளி மற்றும் அதற்கு மேல் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு, வயது வரம்பு கிடையாது. கடந்த மாதம், 29ம் தேதி, இந்தப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மின்வாரிய பணி விதிகளுக்கு எதிராக, இந்த வயது வரம்பு உள்ளது. பல ஆண்டுகளாக, வேலைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். 2009ல், வயது வரம்பு, ஐந்து ஆண்டுகள் என, தளர்த்தப்பட்டது. அதனால், வேலை வாய்ப்பக சீனியாரிட்டியை இழந்தோம். எனவே, வயது வரம்பு இல்லை என, அறிவித்தது சட்டவிரோதமானது. உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய, தடை விதிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, வயது வரம்பு, 35 என, நிர்ணயித்து, புதிய அறிவிப்பை வெளியிட, மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்துக்கு, உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்று, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, வெங்கடேசன் என்பவர், மனு தாக்கல் செய்தார். இம்மனுக்கள், நீதிபதி வெங்கட்ராமன், முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர்கள் ஜெயசந்திரன், தனசேகரன் ஆஜராயினர். மனுக்களை, விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்துக்கு, நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார். இப்பணியிடங்களுக்கு தேர்ந்தெடுத்தால், வழக்கின் இறுதி உத்தரவைப் பொறுத்து, அது அமையும் என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click