வெளிமாநிலங்களில் வாங்கும் மின்சாரத்துக்கு கட்டண உயர்வு விதிக்கப்பட்டால் மின்வெட்டு அதிகரிக்கும்: முதல்வர்

 வெளிமாநிலங்களில் இருந்து வாங்கப்படுகிற மின்சாரத்துக்கான கட்டணத்தை உயர்த்தி இருக்கும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா முழுவதும் கடும் மின்சார பற்றாக்குறை நிலவி வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள். கூடுதல் மின் உற்பத்தி செய்வதற்கான திட்ட இலக்கில், 50விழுக்காடு அளவைக் கூட எட்ட முடியாமல் மத்திய அரசாங்கம் நெருக்கடியில் உள்ளது.

இந்த சூழ்நிலையில், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய உத்தரவு, மின்சார பற்றாக்குறை நிலவுகின்ற மாநிலங்களை கடுமையாகப் பாதிக்கச் செய்யும். தமிழகம் ஏற்கனவே மின்சாரம் கொண்டு வரும் பாதை கிடைக்காமல், வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற முடியாத நிலையில் உள்ளது.

இந்நிலையில், மின்சாரம் கொண்டு செல்லும் பாதையின் நிலைப்புத் தன்மையை காரணம் காட்டி, வழித்தட மின்கடத்தல் திறனை மேலும் கட்டுப்படுத்த திட்டமிட்டு இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

வெளிமாநில மின்சாரத்துக்கு கட்டண உயர்வு

இதேபோல், வெளி மாநிலங்களில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்துக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.8.73-ல் இருந்து ரூ.9 ஆக உயர்த்தவும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்துக்கு அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டால், உள்ளூர் பயன்பாட்டுக்கான மின்சாரத்தின் கட்டணம் மேலும் அதிகரிக்கும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஏற்கனவே கடன் பொறியில் சிக்கி, நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது.

வெளி மாநிலத்தில் இருந்து பெறப்படும் மின்சாரத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமானால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு கூடுதலாக ரூ.350 கோடி நிதி இழப்பு ஏற்படும். மின்சார பற்றாக்குறை நிலவி வரும் இந்த சூழலில் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கொண்டு வருவதில் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதும், மின்சார கட்டணத்தை அதிகரிப்பதும் முற்றிலும் நியாயமற்ற செயலாகும்.

மின்வெட்டு அதிகரிக்கும்?

அது மட்டுமின்றி, தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு நேரத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பை ஏற்படுத்தும். முக்கியமாக கிராமப்புறங்களில் மின்வெட்டு நேரத்தை கூடுதலாக்கும் நிலைமை ஏற்படும். மின்சார பற்றாக்குறை காரணமாக விவசாய உற்பத்தியும், பொருளாதார வளர்ச்சியும் மோசமாக பாதிக்கப்பட்டு, நுகர்வோர்கள் குறிப்பாக கிராமப்புற நுகர்வோர்கள் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்த பிரச்சினை ஏற்கனவே தமிழக மின்சாரத்துறை அமைச்சர் மூலம் மத்திய மின்சாரத்துறை அமைச்சரின் கவனத்துக்கு 23.1.2012 அன்று கொண்டு செல்லப்பட்டது. இதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. மெத்தனப் போக்கினால், இடைக்கால நிவாரணம் பெறுவதற்காக, இந்த பிரச்சினையை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கொண்டு சென்றுள்ளது. என்றாலும், இந்த பிரச்சினையில், நீடித்த ஒரு தீர்வை அடையும் விதமாக, மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணைய உத்தரவை ஒத்திவைக்க தாங்கள் உத்தர விட வேண்டும்.

மின்சார தேவை மற்றும் அளிப்பு நிலை சம அளவை எட்டும் வரையில் அந்த உத்தரவை செயல்படுத்தக்கூடாது என்று தங்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click